ஜலகண்டாபுரம் பகுதியில்வெறிநாய் கடித்து 20 பேர் காயம்ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ஜலகண்டாபுரம்,
சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை கிராமத்தில் தொடங்கி மாநகரம் வரை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதிகளவில் இனப்பெருக்கம் அடைந்த இந்த நாய்கள் வீதிகளில் நடந்து செல்வோரை கடித்து குதறி பதம்பார்த்து விடுகின்றன. இதனால் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்லவே பயப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கட்டிநாயக்கன்பட்டியில் வெறி நாய் ஒன்று நேற்று காலை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வெறிநாயை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர்.
ஆனால் அந்த நாய், ஜலகண்டாபுரத்திற்கு தப்பிஓடி அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு நின்ற பயணிகள் உள்பட பலரை கடித்து குதறியது. இதையடுத்து அங்கு சுற்றித்திரிந்த அந்த நாயை அப்பகுதியில் நின்றவர்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். உடனே அந்த நாய் சூரப்பள்ளி கிராமத்திற்கு தப்பிச்சென்று எதிரில் வருவோரை கடித்து குதறியது.
பின்னர் மாலையில் அந்த நாய் செலவடை கிராமத்திற்குள் புகுந்தது. அதற்குள் இருட்ட தொடங்கி விட்டதால் அந்ந நாயை விரட்டி பிடிக்க முடியவில்லை.
நேற்று நடந்த இந்த சம்பவங்களில் வெறிநாய் கடித்ததில், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த சாந்தி (வயது 35), சூரப்பள்ளியை சேர்ந்த விஷ்வா (3), சவுரியூரை சேர்ந்த ஹரி ரேவந்த் (5), இருப்பாளியை சேர்ந்த சரண்யா (24), செலவடையை சேர்ந்த மாதம்மாள் (56), சூரப்பள்ளியை சேர்ந்த செண்பகம் (53), ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரோஜினி (65), இருப்பாளியை சேர்ந்த செல்வராணி (30) மற்றும் 12 ஆண்கள் என மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களை கடித்த வெறிநாய் இதுவரை பிடிபடவில்லை என்பதால் அவர்கள் பீதியில் உள்ளனர். உடனடியாக அந்த வெறிநாயை பிடித்து அடித்து கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.