மித்ஷாவிடம் கேளுங்கள் என்னிடம் வேண்டாம்.ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காத மோடி.
டெல்லி:
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி செய்தியாளர்களின் கேள்விகள் எதையும் எதிர்கொள்ளவில்லை.டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை சந்திப்பில் முதலில் அமித் ஷாதான் பேசினார். அமித் ஷாவை தொடர்ந்து மோடி பேசினார். மோடி தேர்தல் குறித்த விஷயங்களை பேசிவிட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்கள் கேள்வி கேட்க தொடங்கினார்கள்.முதலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் செய்த சர்ச்சைக்குரிய பிரச்சாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதன்பின் மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் வரிசையாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்து வந்தார். ஆனால் பிரதமர் மோடி எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. மிக சாதாரண கேள்விக்கு கூட மோடி பதில் அளிக்கவில்லை. தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விக்கும் கூட மோடி பதில் அளிக்காமல் இருந்தார். இந்த சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித் ஷா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார். 5 வருடம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. முதல்முறை செய்தியாளர்களை சந்திந்த மோடி.. பரபரப்பு பேட்டி! ஆனால் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த போது மோடி அமித் ஷா இருவரும் செய்தியாளர்களுக்கு பதில் அளிப்பார்கள் என்றே தகவல் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மோடி இதில் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து செய்தியாளர் ஒருவர் மோடியின் பெயரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். ஆனால் மோடி அதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மாறாக பாஜகவில் தலைவர்தான் எல்லாம். அதனால் கட்சி தலைவரிடம் கேள்வி கேளுங்கள்.நீங்கள் அமித் ஷாவிடம் கேள்வி கேளுங்கள். அவர் பதில் அளிப்பார் என்று மோடி கூறினார். அதன்பின் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அமித் ஷா மட்டுமே பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.