டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை
டெல்லி:
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் காரணமாக வகுப்பறையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
மாணவரை நேற்று மாலை முதல் காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்வதற்கு முன் ரிஷி ஜோஷ்வா தன்னுடைய ஆங்கில பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதேபோல் டெல்லி ஜவகர்லார் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டது நினைவிற்குரியது. அவர் கடைசியாக தனது பேஸ்புக் தளத்தில் பதிவு செய்த தகவல், நண்பர்களிடையே அதிகம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில், எம்.பில் மற்றும் பி.எச்டி மாணவர் சேர்க்கையின்போது பல்கலைக்கழக நிர்வாகம் பாகுபாடு காட்டியதாக கூறியிருந்தார்
தலைநகர் டெல்லிக்கு மருத்துவ மேல் படிப்புகளுக்காக சென்ற தமிழக மாணவர் சரவணன் கடந்த 2016- ஆம் ஆண்டிலும், சரத் பிரபு அதற்கு சில மாதங்களுக்கு முன்பும் உயிரிழந்தார்.
வெளிமாநிலங்களுக்கு செல்லும், தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என கூறப்படும் நிலையில், தொடர் உயிர்பலி சம்பவங்கள் நிகழ்வது, பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.