ஆபாச படங்களை வைத்து பிளாக்மெயில் செய்த காதலன் – ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கனை கைது
சென்னை:
காதலிக்கும் போது நெருக்கமாக இருந்த தருணங்களில் புகைப்படங்கள் செல்ஃபிக்கள் எடுத்துக்கொள்வது தவறு என்பதை சமீபத்தில் நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சென்னையில் டென்னிஸ் வீராங்கனை வாசவியின் வாழ்க்கையிலும் இது போல ஒரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஃபேஸ்புக்கில் நட்பாக பழகி காதலித்த காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டியதால் அவரை ஆள் வைத்து கடத்தி அடித்துள்ளார். கடத்தல் வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தை பூர்வீகமாக கொண்ட வாசவி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை மாநில அளவிலும், இந்தியாவில் நடந்த பல்வேறு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜெயலலிதா கையினால் பரிசுகளும் வாங்கியிருக்கும் வாசவி தற்போது அமெரிக்காவில் படித்துக்கொண்டு அங்கேயே டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தார்.
சென்னையைச் சேர்ந்த நவீத் அகமது என்பவருடன் நட்பு ஏற்பட்டு காதலாகி அதுவே அவரது வாழ்க்கையில் சிக்கலாக்கியுள்ளது.
அடி வெளுத்த நபர்கள்
கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த காசிம்முகமது என்பவரின் மகன்தான் நவீத் அகமது. பி காம் படித்து வருகிறார். கடந்த வாரம் சினிமா பார்த்து விட்டு இரவில் திரும்பிய போது மர்மநபர்கள் சிலர் நவீத்தை கடத்தி அடி வெளுத்து விட்டு செல்போன், வாட்சை பறித்துக்கொண்டு கத்திப்பாரா பாலத்தின் கீழே போட்டு விட்டு சென்று விட்டனர்.
காமக்கொடூர மாமனார்கள்… தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்
செல்போனை பறித்த மர்மநபர்கள்
காயங்களுடன் முட்புதரில் வீசப்பட்ட நவீத், டீக்கடைக்காரரிடம் செல்போனை வாங்கி பேசி அப்பாவிற்கு தகவல் தெரிவிக்கவே பெற்றோர்கள் வந்து நவீத்தை அழைத்து சென்றனர். நவீத்தை கடத்தி செல்போனை பறித்து சென்றவர்கள் யாராக இருக்கும் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்தன. சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடத்தல் கும்பல் பயன்படுத்திய பைக்கின் பதிவு எண் சிக்கியது.
கடத்தலுக்கு காரணம்
அந்த பைக் வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. செல்வராஜின் மகன் சமுத்திரகனி வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார். இவர்களின் மகன் பாஸ்கர்தான் இந்த கடத்தலில் ஈடுபட்டவர் என்று தெரியவந்தது.
கடத்தலுக்குக் காரணம் குறித்து விசாரித்த போது நவீத் அகமதுவின் காதலி வாசவியின் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அமெரிக்க காதலி
பேஸ்புக்கில் நட்பான காதலியுடன் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகிய நவீன், நெருக்கமாக நேரத்தில் எடுத்த செல்ஃபிக்களை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இந்த வாசவி, தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.
நெருக்கமான புகைப்படங்கள்
அமெரிக்காவில் இருந்து கடந்த 6ஆம் தேதி சென்னை வந்த வாசவி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அண்ணாநகரில் உள்ள பூங்காவில் நவீனை சந்தித்து பேசிய வாசவி நெருக்கமான படங்களை அழித்து விடுமாறு நவீத்திடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க நவீத் மறுத்து விட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்தே வாசவியின் நண்பர்கள் நவீத்தை கடத்த திட்டம் போட்டனர். சினிமா பார்த்து விட்டு திரும்பிய போது கடத்தி அடி வெளுத்து விட்டு செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.
விமான நிலையத்தில் கைது
கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பாஸ்கர், சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்து வாசவி அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நுங்கம்பாக்கம் கோகுல், அரும்பாக்கம் அபிசேக் ஆகியோரையும் கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவனையும் தேடி வருகின்றனர்.
போலீசில் புகார் கொடுக்கலாம்
நெருக்கமான புகைப்படங்களை வைத்து மிரட்டியதால்தான் ஆள் வைத்து கடத்தி அடித்திருக்கிறார் வாசவி. குறுக்கு வழியில் போகாமல் நேரடியாக போலீசில் புகார் அளித்திருந்தால் காவல்துறையினரின் கவனிப்பே வேறு மாதிரி இருந்திருக்கும். நவீத்தை கைது செய்து இந்த நேரம் கம்பி எண்ண வைத்திருக்கலாம். ஆள் வைத்து கடத்திய புகாரின் பேரில் இப்போது வாசவி கைது செய்யப்பட்டுள்ளார். புகைப்படங்கள் இருந்த செல்போனை நவீத்திடம் இருந்து பறித்தவர்கள் அதனை பாதாள சாக்கடையில் வீசி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.