மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 அன்று பாஜகவிற்கு எதிரான கட்சிகளின் கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தக் கூட்டம் குறித்தும் அதன் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகள் குறித்தும் தற்போது பார்ப்போம்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த அடுத்த நாளே ஸ்டாலினை திமுக தலைவர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஸ்டாலினுக்கு மட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மோடியை வீழ்த்த மாநிலக் கட்சிகளோடு கை கோர்க்க சோனியா காந்தி தயாராகி விட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முடிவுகள் வெளியாகும் அன்றே கூட்டணிக் கட்சிகளை டெல்லியில் அணிவகுக்கச் செய்யும் காங்கிரசின் முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஆட்சி மாற்றத்திற்காகவே கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டுவதாக தெரிகிறது. இப்போதைக்கு பாஜகவை வீழ்த்துவது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருப்பதால் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்கவும் காங்கிரஸ் சம்மதிக்கும் என்றே தெரிகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளவும் அக்கட்சி தயாராக இருப்பதாக தேர்தலுக்கு முன்பே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. ராகுலின் தலைமையை ஏற்க மாநிலக் கட்சிகளுக்கு தயக்கம் இருப்பதாலேயே, மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை சோனியா கையில் எடுத்திருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற தலைவர்கள் சோனியா தலைமையேற்ற கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதால் சோனியாவின் முயற்சி பலனளிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாவின் முயற்சி வெற்றி பெறுமா? மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவாரா அல்லது மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் பிரதமராக்கப் போகிறதா இல்லை பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறதா என்பதற்கான விடை மே 23 அன்று தெரியும்.