உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 709 பள்ளிகள்.. விரைவில் மூட தமிழக அரசு அதிரடி முடிவ.
சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை விரைவில் சீல் வைத்து மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உரிய அங்கீகாரமின்றி சுமார் 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளை வரும் கல்வி ஆண்டிற்கு முன்னதாகவே மூட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு தொடர் அங்கீகாரம், ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளும் அங்கீகாரம் என இரு பிரிவுகளாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரத்துக்கான கால அவகாசம் முடியும் தேதியில் மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டும்.
அந்த சமயத்தில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யும் போது, அதிகாரிகளின் திருப்தியின்மையால் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத சூழலும், அவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இப்பிரச்னைகளை தீர்க்க அனைத்து வகை பள்ளிகளும் உரிய அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன
அக்கா ரேவதிக்காக.. தம்பி முகிலன் பிரச்சாரம்.. வைரலாகும் புகைப்படம்!
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 86 பள்ளிகளும், சேலம் மாவட்டத்தில் 53 பள்ளிகளும் , திருவள்ளூர் மாவட்டத்தில் 48 பள்ளிகளும், சென்னை மாவட்டத்தில் 7 பள்ளிகள் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாக தகவல் வந்துள்ளது.
இப்பள்ளிகளை விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.