டெல்லி
நீங்கள் மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா? சொல்லுங்கள்.. நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி!
டெல்லி: மாயாவதி மட்டும்தான் உத்தர பிரதேசத்தில் ஒரே தலித் பெண்ணா என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் தலித் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவும் உள்ளது. தன்னை தலித் என்று கூறிக்கொள்ளும் மாயாவதி, ஏன் ஒரு தலித் சிறுமிக்காக பேசுவதில்லை. ஏன் அவர் இன்னும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று மோடி பேசி இருந்தார்.
கமல் பேச்சை வைத்து மோதலை ஏற்படுத்த சதியா?
இதற்கு பதில் அளித்த மாயாவதி, பெண்கள் பாதுகாப்பு குறித்து மோடி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மோடியை தங்கள் வீட்டு ஆண்கள் சந்திப்பதை கூட பாஜகவை சேர்ந்த பெண்கள் விரும்புவதில்லை. மோடியை சந்தித்தால் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவாரோ என்று பாஜக பெண்கள் பயப்படுகிறார். பாஜகவின் நிலை அப்படித்தான் உள்ளது என்று மாயாவதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த வார்த்தை போரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சேர்ந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாஜகவில் இருக்கும் பெண்களையும், மோடியையும் மாயாவதி அவமானப்படுத்திவிட்டார். மோடி ராஜஸ்தான் வன்புணர்வு குறித்து சரியான கேள்வியை கேட்டார். ஆனால் மாயாவதி அதற்கு பதில் அளிக்காமல், மோடியை அவமானப்படுத்துகிறார்.
மாயாவதி மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா? அவர் ஏன் மற்ற தலித் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேச மறுக்கிறார். மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயாவதி விமர்சனம் செய்வது மிகப்பெரிய தவறு.
எங்கள் கட்சியில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் கட்சிக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை மாயாவதி கூற வேண்டாம். தேர்தல் தோல்வி பயத்தில் மாயாவதி உளற வேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.