டெல்லி: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கத்தின் பட்டியலில் சேர்த்தன. கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனும் தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைத்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.
இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இலங்கை: முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரை- சொத்துகள் சூறை!
அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது. எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Government extended ban of LTTE for 5 more years .