இந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமாகி இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் போது அந்நாட்டில் இருந்து, பணக்கார்கள் வெளியே செல்வார்கள். தங்கள் சொத்தை காக்கவும், வியாபாரம், வர்த்தகத்தை காக்கவும் இவர்கள் இப்படி நாட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம்.
இதுகுறித்த அறிக்கையை ஏஎப்ஆர்ஏசியா வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. குளோபல் வெல்த் மைக்ரேஷன் ரிவ்யூ (Global Wealth Migration Review) என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகமாகி உள்ளது.
இந்த பட்டியலில் சீனாதான் முதல் இடம் வகிக்கிறது. அதன்படி சீனாவின் மீது வரிசையாக அமெரிக்கா அதிக வரிகளை விதித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் ரஷ்யா இரண்டாம் இடம் வகிக்கிறது. ரஷ்யாவில் நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்நாட்டில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவை விட்டு வருடத்திற்கு வெளியேறும் பணக்காரர்களில் 5000 பேர் வரை கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2% பேர் இதில் மிக மிக அதிக வளம் பெற்றவர்கள். அதேபோல் இந்தியாவின் மொத்த வளத்தில் 48% இந்த பணக்காரர்களிடம்தான் உள்ளது.
ஆனால் உலக அளவில் மொத்த பொருளாதாரத்தில் 36% பணக்காரர்களிடம் உள்ளது. இந்தியாவில்தான் இந்த நிலை மிக மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட பாதி அளவு வளத்தை மிக குறைவான மக்களே இந்தியாவில் கட்டுப்படுத்துகிறார்கள்.
இத்தனை நாட்கள் பிரிட்டனில் நிலவி வந்த பிரிக்சிட் (brexit) பிரச்சனை காரணமாக, அங்கிருந்து அதிக அளவில் பணக்காரர்கள் வெளியேறினார்கள். தற்போது அந்த சூழ்நிலை கொஞ்சம் மாறி உள்ளது.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள் அதிகம் செல்வது அமெரிக்காவாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடி இந்திய பணக்காரர்கள் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.