Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக வைகோ எச்சரிக்கை

Posted on May 13, 2019 By admin No Comments on ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக வைகோ எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக;
இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்!

  • தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.
  • சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது. மோடி அரசுக்குக் காவடி தூக்கும் கையாலாகாத எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.
  • காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
    2017 பிப்ரவரி 15 இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்தியா முழுவதும் 8 கடற் பகுதிகள் மற்றும் 23 உள்நிலப்பகுதிகள் அடங்கிய மொத்தம் 31 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
    பின்னர் 2018 ஜனவரி 19 ஆம் தேதி நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஏல நடைமுறை தொடங்கப்பட்டது.
  • இதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘நெல்ப்’ (New Exploration Licensing Policy -NELP) எனப்படும் உரிமம் வழங்கும் திட்டத்தை மாற்றி, ‘ஹெல்ப்’ (Hydrocarbon Exploration and Lincesing Policy -HELP) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதைபடிவ எரிபொருளான மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் மற்றும் நீர்ம உரிவாயு உள்ளிட்ட எந்த வகையாக இருந்தாலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் . தனித் தனியாக உரிமங்கள் பெறத் தேவை இல்லை. இதற்காக ‘திறந்தவெளி அனுமதித் திட்டம்’ (Open Acreage Lincensing Policy -OALP) ஒன்றையும் மத்திய அரசு அனுமதித்து இருக்கின்றது.
  • மேலும் ஓ.ஏ.எல்.பி. உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் – தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப் பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.
  • 1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.
  • மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
    நீரியல் விரிசல் முறையில் (Hydro Fracking) 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் அந்தத் துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல் பரப்புக்கு எடுத்து வந்த நீரைப் பிரித்துவிட்டு, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும்.
    இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.
  • வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?
    தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.
  • காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.
    எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.
Health News

Post navigation

Previous Post: அடுத்த 2 நாளைக்கு வடகடலோர மாவட்டங்களை வெயில் வச்சு செய்யும்!!!!!!!!
Next Post: அச்சாரம் ரெடி?.. சந்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே.. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்

Related Posts

33-YEAR-OLD DAUGHTER DONATES LIVER TO SAVE CRITICALLY ILL FATHER AT FORTIS VADAPALANI 33-YEAR-OLD DAUGHTER DONATES LIVER TO SAVE CRITICALLY ILL FATHER AT FORTIS VADAPALANI Health News
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News
சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. Genaral News
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்????? Health News
புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு...நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க் புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க் Genaral News
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme